2022 ஆம் ஆண்டுக்கான தொழில் சந்தை மீட்சி
சர்வதேச தொழில் தாபனம் 2022 ஆம் ஆண்டுக்கான தொழில் சந்தை மீட்சியை குறைத்து மதிப்பிடுகின்றது
தொற்று நோய் உலகளாவிய சந்தையில் தொடர்ந்தும் கணிசமான தாக்கத்தைக் கொண்டிருப்பதால் மெதுவானதும் நிச்சயமற்றதுமான மீட்சி தொடர்பாக ILO வின் உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டத்தின் போக்குகள் 2022 அறிக்கை எச்சரிக்கின்றது.

© KB Mpofu/ ILO
ILO செய்தி (ஜெனீவா) – சர்வதேச தொழில் தாபனம் (ILO) 2019ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டு தொடர்பாக உலகளாவிய வேலை மணித்தியாலங்கள் 52 மில்லியன் முழு நேர தொழில்களுக்கு சமமாக பற்றாக்குறை ஒன்றை எதிர்பார்த்து, 2022ஆம் ஆண்டில் தொழில் சந்தை மீட்சிக்கான அதன் எதிர்வுகூறலை குறைத்து மதிப்பிடுகின்றது. 2021 மே மாதத்தில் முன்னைய முழு ஆண்டுக்கான மதிப்பீடு 26 மில்லியன் முழு நேரத்துக்குச் சமனான தொழில்களின் பற்றாக்குறையை எதிர்பார்த்தது.
அண்மைக்கால எதிர்பார்ப்பு 2021ஆம் ஆண்டில் காணப்பட்ட சூழ்நிலையை விட ஒரு முன்னேற்றமாகக் காணப்பட்டபோதிலும், ILO வின் உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டம் - போக்குகள் 2022 இற்கு (WESO போக்குகள்) இணங்க, தொற்று நோய்க்கு முந்திய பணிபுரிந்த உலகளாவிய மணித்தியாலங்களைவிட சுமார் 2 சதவீதம் குறைவாகக் காணப்படுகின்றது.
உலகளாவிய வேலைவாய்ப்பின்மை ஆகக் குறைந்தது 2023ஆம் ஆண்டு வரை கோவிட் - 19 இற்கு முன்னர் காணப்பட்ட மட்டங்களைவிட மேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 2019ஆம் ஆண்டு காணப்பட்ட 186 மில்லியனுடன் ஒப்பிடும்போது, 2022ஆம் ஆண்டுக்கான மட்டம் 207 மில்லியனாக மதிப்பிடப்படுகின்றது. மக்களில் பலர் தொழில் படையிலிருந்து விலகியுள்ளதால், வேலைவாய்ப்பு மீதான ஒட்டுமொத்தத் தாக்கம் இந்த எண்ணிக்கைகைகளில் காட்டப்படுவதைவிட கணிசமான அளவு அதிகமாகும் எனவும் ILO வின் அறிக்கை எச்சரிக்கின்றது. 2022ஆம் ஆண்டில் உலகளாவிய தொழில் படை பங்கேற்பு வீதம் 2019ஆம் ஆண்டை விட 1.2 சதவீதம் குறைவாகக் காணப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
டெல்டா மற்றும் ஒமிக்றோன் போன்ற கோவிட் - 19 இன் அண்மைக்கால திரிபுகள் பணி உலகில் கொண்டுள்ள தாக்கத்தையும் அவ்வாறே, தொற்று நோயின் எதிர்காலப் போக்கு தொடர்பாக கணிசமாக நிச்சயமற்ற தன்மையையும் 2022 எதிர்வுகூறலின் குறைத்து மதிப்பிடல் ஓரளவுக்கு பிரதிபலிக்கின்றது.
தொழிலாளர்களின் குழுக்களிலும் நாடுகளிலும் நெருக்கடியானது கொண்டுள்ள தாக்கத்தில் வலிமையான வேறுபாடுகளையிட்டு WESO போக்குகள் அறிக்கை எச்சரிக்கின்றது. இந்த வேறுபாடுகள், அபிவிருத்தி அந்தஸ்தைப் பொருட்படுத்தாது, நாடுகளினுள்ளும் நாடுகளுக்கிடையிலும் சமத்துமின்மையை ஆழமாக்கி, பெரும்பாலும் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதார, நிதியியல் மற்றும் சமூக அமைப்பை பலவீனப்படுத்துகின்றது. இந்த சேதம் தொழில் படை பங்கேற்பு, குடும்ப வருமானங்கள் மற்றும் சமூக – சாத்தியமானவாறு அரசியல் ஒத்திசைவுக்கான வாய்ப்பான நீண்ட கால பின்விளைவுகளுடன் சீர்செய்வதற்கு பல வருடங்களை தேவைப்படுத்தும்.
நெருக்கடியில் இருக்கும் இந்த இரண்டு ஆண்டுகளில், தோற்றப்பாடு வலுவற்றதாகவும் மீட்சிக்கான வழி மெதுவானதாகவும் நிச்சயமற்றதாகவும் காணப்படுகின்றன."
ILO பணிப்பாளர் நாயகம் கை றைடர் (Guy Ryder)
பெண்களின் வேலைவாய்ப்பில் நெருக்கடியின் விகிதசமனற்ற தாக்கம் எதிர்வரும் ஆண்டுகளில் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை கூறுகின்றது. அதேவேளை, கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூடப்படுதல் இளம் ஆட்களுக்கு, குறிப்பாக இணைய வசதி அற்றவர்களுக்கு “தொடர்ச்சியான நீண்ட கால விளைவுகளைக் கொண்டிருக்கும்”.
“நெருக்கடியில் இருக்கும் இந்த இரண்டு ஆண்டுகளில், தோற்றப்பாடு வலுவற்றதாகவும் மீட்சிக்கான வழி மெதுவானதாகவும் நிச்சயமற்றதாகவும் காணப்படுகின்றன” என ILO பணிப்பாளர் நாயகம் கை றைடர் (Guy Ryder) கூறுகின்றார். “வறுமை மற்றும் சமத்துவமின்மை தொடர்பான அதிகரிப்புகளுடன் தொழில் சந்தைக்கான வாய்ப்பான நீடித்த சேதத்தை நாம் ஏற்கனவே கண்டுகொண்டிருக்கின்றோம். பல தொழிலாளர்கள் புதிய வகையான தொழில்களுக்கு மாறிச்செல்லுமாறு கேட்கப்படுகின்றனர். உதாரணமாக, சர்வதேச பிரயாணம் மற்றும் சுற்றுலாத்துறையின் நீண்டகால மந்த நிலை.”
“பரந்த அடிப்படையிலான தொழில் சந்தை மீட்சி இன்றி, இந்த தொற்று நோயிலிருந்து உண்மையான மீட்சி இருக்கவே முடியாது. அத்துடன் நிலைபேறான தன்மையுடன் திகழ்வதற்கு, இந்த மீட்சியானது சுகாதாரம், பாதுகாப்பு, சமத்துவம், சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூகக் கலந்துரையாடலை உள்ளிட்ட கண்ணியமான தொழில் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருத்தல் வேண்டும்.”
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளுக்கான விரிவான தொழில்சந்தை எதிர்பார்ப்புகளை WESO போக்குகள் உள்ளடக்குகின்றன. அது தொற்று நோய் மீட்சிக்கான பல்வேறு தேசிய அணுகுமுறைகளைப் பிரதிபலிப்பதுடன் பல்வேறு தொழிலாளர்கள் குழுக்கள் மற்றும் பொருளாதாரத் துறைகளில் தாக்கங்களை மதிப்பிட்டு உலகளாவிய ரீதியில் தொழில் சந்தை மீட்சி எவ்வாறு விரிவடைந்துள்ளது என்பது பற்றிய மதிப்பீட்டை வழங்குகின்றது.
முன்னைய நெருக்கடிகளில் காணப்பட்டதைப்போன்று, சிலருக்கு தொற்று அதிர்ச்சிக்கு எதிராக தற்காலிக வேலைவாய்ப்பானது ஒரு பாதுகாப்பை உருவாக்கியது என ILO அறிக்கை காட்டுகின்றது. பல தற்காலிகத் தொழில்கள் முடிவுறுத்தப்பட்ட அல்லது புதுப்பிக்கப்படாத அதேவேளை, நிரந்தர தொழில்களை இழந்த தொழிலாளர்கள் அடங்கலாக மாற்றுத் தொழில்கள் உருவாக்கப்பட்டன. சராசரியாக, தற்காலிகப் பணி சம்பவங்கள் மாற்றமடையவில்லை.
தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில், நெருக்கடியிலிருந்து அனைத்தையும் உள்ளடக்கிய மனித மைய மீட்சியை உருவாக்குவதை குறிக்கோளாகக் கொண்ட பிரதான கொள்கை விதப்புரைகளின் ஒரு பொழிப்பையும் WESO போக்குகள் வழங்குகின்றன. இவை 2021 ஜூன் மாதத்தில் ILO வின் 187 உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட “அனைத்தையும் உள்ளடக்கிய, நிலைபேறான, மீட்சித்தன்மை மிக்க, கோவிட் - 19 நெருக்கடியிலிருந்து மனித மைய மீட்சிக்கான நடவடிக்கைக்காக உலகளாவிய அழைப்பு” என்பதை அடிப்படையாகக் கொண்டவையாகும்.