Our impact, Their voices

பெண் விவசாயிகளை முன்னிலைக்குக் கொண்டுவரும் முல்லைத்தீவின் முதலாவது தனிப் பெண்கள் கூட்டுறவு

Feature | Puthukkudiyiruppu, Sri Lanka | 22 March 2018
புதுக்குடியிருப்பு - தனியே 15 பெண்களோடு தான் இது ஆரம்பித்தது. வட இலங்கையின் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள தன் வீட்டுக்கு யுத்தம் முடிந்து திரும்பிய நேரம், யுத்தத்தினாலும் இடப்பெயர்வினால் கைவிடப்பட்டதனாலும் வாழவே முடியாத சூழ்நிலைக்கு மாற்றப்படட தனது வீட்டைப் பார்த்த கவலையான தருணத்தை நினைவுகூர்கிறார் சிவசுப்ரமணியம் நந்தினி. காவலுக்கு யாரும் இல்லாத நிலையில் முன்னொரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்த அவர்களது குடும்பத்தின் தென்னந்தோட்டம் காட்டு யானைகளால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. "நாம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களோடு வந்தோம். ஆனால் எல்லாமே தலைகீழாக இருந்தது" என்கிறார் நந்தினி.

புதுக்குடியிருப்பிலே வளமான வாழ்க்கையொன்றை அமைத்துக்கொள்ளப் போராடுபவர் அவர் மட்டுமேயல்ல. சிவகுமார் மாலாவும் அதே நிலையிலிருந்தவர் தான்."எம்மிடம் உள்ள ஒற்றுமையான பொதுத்தன்மை என்னவென்றால் நாம் பெண்களாக இருந்து எங்கள் குடும்பங்களைத் தலைமைதாங்கி நடத்துகிறோம் என்பதே " என்கிறார் மாலா. யுத்த கால சூழ்நிலையிலிருந்து தப்பித்த பிறகு புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்ளப் போராடவேண்டியிருந்தது. மீள வாழ்க்கையைக் கட்டியெழுப்ப சில நிதியுதவிகள் கிடைத்தாலும் கூட அவை போதுமானதாக இருக்கவில்லை.

©ILO

"எங்களுக்குப் பணம் தேவைப்பட்டது, ஆனால் யாருமே கடனுதவியாகக் கூட வழங்க முன்வரவில்லை" என்று விளக்குகிறார் மாலா. 15 பேர் கொண்ட இந்தப் பெண்களுக்கு இருந்த ஒரே தீர்வு தமக்கிடையிலான நெருக்கமான வலைப்பின்னல் ஒன்றை உருவாக்குவதே. இவர்களில் யாராவது ஒருவரது குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டாலோ, அல்லது வீட்டில் அவசியமான திருத்தவேலை ஒன்று தேவைப்பட்டாலோ மற்றப் பெண்கள் அனைவரும் சேர்ந்து தமது சொந்தப்பணத்தைத் திரட்டி அதன் மூலமாக உதவுவார்கள். அது தான் பின்னாளில் உருவாக்கப்பட்ட புதுக்குடியிருப்பு மாவட்ட செயலகப்பிரிவு பெண்கள் தொழில் முனைவோர் கூட்டுறவு சங்கம் ( PTK கூட்டுறவு) என்பதன் ஆரம்பப்புள்ளி.

இன்று, நந்தினி இந்தக் கூட்டுறவு சங்கத்தின் தலைவர், மாலா இதன் செயலாளர். சர்வதேச தொழிலாளர் அமைப்பு இவர்களோடு மிக நெருக்கமாக இணைந்து செயலாற்றுகிறது. முதலில் இந்த அங்கத்தவர்களை 80 ஆக அதிகரிபதிலும், பின்னர் இன்னொரு சமூக நிறுவனத்தோடு இணைத்தும் தனது பங்களிப்பை வழங்கியது.
அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு ILO ( சர்வதேச தொழிலாளர் அமைப்பு ) இன் பொருளாதார அபிவிருத்தி மூலமாக உள்ளூராட்சிக்கு அதிகாரமளித்தல் (LEED) திட்டம் மூலமாக கூட்டுறவு சங்கமாகப் பதிவு செய்யப்பட்டதுடன் இலங்கையில் நல்லிணக்கத்தை நோக்கி வேலைவாய்ப்பு தலைமுறை மற்றும் வாழ்வாதாரங்கள் (EGLR) திட்டம் மூலமாக கூட்டுறவு முகாமைத்துவத்துக்கும் திறன் கட்டியெழுப்புதலுக்கும் நிதியையும் பெற்றுக்கொண்டார்கள்.

அம்மாவட்டத்திலுள்ள ஒரேயொரு தனித்த பெண்கள் கூட்டுறவு சங்கமாக இது அமைந்ததால், அதிகளவான பெண்களைச் சென்று சேர்வதற்கு இந்த செயற்பாடுகள் வழிவகுத்தன. தற்சமயம் 500ஐ அண்மித்துள்ள, எனினும் படிப்படியாக அதிகரிக்கும் அங்கத்தவர்களோடு பயணிக்கும் இவர்கள் மேலும் புதிய இலட்சியம் கொண்ட ஒரு கட்டத்தை அடைவதற்காகத் திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள்.

நாடளாவிய ரீதியில் வருமானங்களை உயர்த்தும் கூட்டுறவுச் சங்கங்கள்

EMPOWER என்ற பெயரிலான 2 மில்லியன் அமெரிக்க டொலர் கொண்ட புதிய திட்டம், ஐக்கிய நாடுகளின் அமைதியைக் கட்டியெழுப்பும் நிதியத்தின் (UNPBF) நிதியுதவி மூலமாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வழியாகவும் உலக உணவுத் திட்டம் ( WFP) மற்றும் PTK பெண்கள் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் பங்காளர்களாகவும் கொண்டு செயற்படுகிறது.
இது 2019 ஜூன் மாதம் நிறைவுபெறும்.

"LEED மற்றும் EGLR திட்டங்களுடனான எமது முன்னைய அனுபவங்கள் மூலமாக கூட்டுறவு மாதிரிகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்பதை நாம் அறிந்துள்ளோம்" என்கிறார் ILO வின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான நாட்டுப் பணிப்பாளராக இருக்கும் சிம்ரின் சிங். கடந்த ஏழாண்டுகளில் வடக்கு இலங்கையின் 38 கூட்டுறவு சங்கங்களுக்கு தமது அமைப்பு உதவியதாகக் குறிப்பிடும் அவர், "எமது தொடர் களப் பணிகளின் விளைவாக இந்தக் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வருமானங்கள் கடந்த ஆறு வருடங்களில் இரு மடங்கானதை நாம் கண்டிருக்கிறோம். எனவே கூட்டுறவுச் சங்கங்கள் எவ்வாறு பயனுள்ளதாக உருமாற்றமடையும் என்பதை அறிவோம்" என்றும் கூறுகிறார்.

புதுக்குடியிருப்பில் நடைபெற்ற அறிமுக விழாவில் பேசும்போது, WFPயின் நாட்டுக்கான உதவிப் பணிப்பாளர் ங்குயென் டுக் ஹோங், WFP மற்றும் ILO ஆகியன இணைந்து EMPOWER திட்டத்தினை பலப்படுத்தத் தமது நிபுணத்துவத்தை இங்கே கொண்டுவந்து சேர்க்கும் என்று குறிப்பிட்டார். மேலும் " இந்தத் திட்டத்தினை செயல்படுத்தும் ஒரு பங்குதாரராக PTK பெண்கள் கூட்டுறவு சங்கத்தின் பாகமானது அடிப்படையிலிருந்து மேல் நோக்கியதாகவும், உள்ளூரை சொந்தமாகக்கொண்ட பொருளாதார மீட்பை உள்ளடக்கியதும், சமூக ஒருங்கிணைப்பைக் கொண்டதுமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக யுத்தத்தினால் துண்டிக்கப்பட்டிருந்த வர்த்தகத் தொடர்புகளை புதுப்பிக்க உதவும் பங்களிப்பை இவை இதன் விளைவுகளாகத் தரும்." எனக் குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் கூட்டுறவுச் சங்கங்கள் இலங்கையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைக் கண்டுள்ளன. ஒருவரோடொருவர் ஒன்றிணைத்து செயற்படுத்துவதன் மூலமாக விவசாயிகளும் மீனவர்களும் சந்தைகளை அணுகுவதற்கும் கூட்டுக் கொள்வனவு மற்றும் சந்தைப்படுத்தலின் சாதகங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் கடன் வசதிகளை வசப்படுத்துவதற்கும் சமூக நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்களில் பங்குகொள்வதற்கும் வாய்ப்புக்களைப் பெற்றுள்ளனர். விவசாயக் கூட்டுறவுச் சங்கங்கள் விவசாயத் திணைக்களம் மற்றும் கூட்டுறவுத் திணைக்களம் ஆகியவற்றிடமிருந்து முக்கியமான நிறுவனரீதியான உதவிகளையும் பெற்றுள்ளன.

பெண்களை மேம்படுத்துதல் சமூகத்துக்குத் தரும் அனுகூலங்கள்

குறிப்பாக, வழமையாக ஆண்களால் வகிக்கப்படும் தொழில்களையும் முகாமைத்துவப் பதவிகளையும் பெண் பயனாளிகளுக்கு வழங்குவதன் மூலம், இந்தத் திட்டமானது பெண்களை பாரம்பரிய ஆண் -பெண் பாகுபாட்டு ரீதியிலான வகைப்படுத்தப்பட்ட நிலைகளை கட்டுடைத்து மேம்படுத்தவும் உதவுகிறது. "சமூகத்தின் முடிவுகளை எடுப்பதில் பங்குபற்றக்கூடிய எமது இயலுமை அதிகரித்துள்ளது, அத்துடன் பல்வேறு தளங்களிலும் நாங்கள் தலைமைத்துவப் பாத்திரங்களை ஏற்கக்கூடியவர்களாக மாற்றம் கண்டுள்ளோம்" என்கிறார் 29 வயதான அண்ணாதாசன் புஷ்பராஜி, இந்த அமைப்பின் மிக இளவயது அங்கத்தவர். மேலும் இந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானமானது தமது குடும்பத்தை வழிநடத்தும் பிரதானமான பராமரிப்பாளர்களாக மேம்படுத்தியிருப்பதோடு குடும்பத்தைக் காப்பாற்றத் துணையாகவிருப்பதையும் குறிப்பிடுகிறார்.

இது, பெண் விவசாயிகள் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும், முரண்பாட்டு சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் யுத்தத்தினால் விதவைகள் ஆக்கப்பட்டவர்கள் ஆகியோர் அதிகமாக வாழும் முல்லைத்தீவில் மிக முக்கியமானதாக அமைகிறது. மேற்கண்ட பெண்கள் இலகுவாகக் குறிவைக்கப்படக் கூடியவர்களாகவும் , சமூக மற்றும் அரசாங்க முடிவுகளை எடுக்கும் நடவடிக்கைகளின்போதும் பொதுவாக விலக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகிறார்கள். இங்கே எடுக்கப்பட்ட சில ஆய்வுகள் மூலம், இந்தப் பிரதேசத்தில் உள்ள பெண்களுக்கு சுகாதார ரீதியான சவால்களும் இருப்பதைக் காட்டுகின்றன. குறிப்பிடத்தக்களவு பெண்கள் எடைக்குறைவு, சத்துக்குறைபாடு மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளால் பாதிக்கப்படக்கூடிய ஆபத்துக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், ஒரு கூட்டுறவுச் சங்கத்தில் இணைந்து அதன் அங்கமாகுவது பெண்களுக்கு தொழில்ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தம்மைப் பாதுகாத்து பலப்படுத்திக்கொள்ள உதவுவதாக அமையும். உதாரணத்திற்கு நந்தினி முன்பு தனது உற்பத்திப் பொருட்களை விற்று 15000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை மாதம் ஒன்றுக்கு வருமானம் பெற்றதிலிருந்து இப்போது 50000 ரூபாய் அல்லது அதற்கு அதிகமாகப் பெறுகிறார். சில மாதங்களில் இந்தத் தொகை 80000 ரூபாய் போன்ற பெரிய தொகையாகவும் அதிகரிக்கிறது.

அவரது வருமானத்தின் மிக முக்கியமான பங்கானது உலரவைத்த முருங்கை இலைகளைக் கூட்டுறவுச் சங்கம் மூலமாக தனியார் துறைக்கு விற்பனை செய்வது மூலமாக ஆகும். சரியாகச் சொல்வதானால், அவரது தோட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட்ட 400 மரங்களில் இருந்து 500 அல்லது அதற்கு மேற்பட்ட கிலோ எடையுடைய முருங்கை இலைகளை மாதமொன்றுக்கு விற்பதன் மூலம் மட்டும் 20000 ரூபாயை மாதாந்தம் உழைக்கிறார்.

ILO அவருக்கு விதைகளையும் கன்றுகளையும் வழங்கி இதன் மூலம் பப்பாசி, வாழை, அன்னாசி, கத்தரி, மரவள்ளி, பச்சை மிளகாய் போன்ற மரக்கறிகளைப் பயிரிட்டு ஒரு வளமான, இலாபமீட்டிடக்கூடிய சிறு தோட்டம் மூலம் மேலதிக வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் விதமாகவும் உதவி செய்துள்ளது. இத்தனைக்கும் இந்தப் பிரதேசத்தில் ஒரு குடும்பம் சராசரியாக 30000 ரூபாய் மட்டுமே மாதாந்த வருமானமாக ஈட்டிடக்கூடியதாகவுள்ளது

EMPOWER இன் கீழ் மேலும் விரிவடையவுள்ள PTK

" இவர்களது உற்பத்திப் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாவதையே நாம் அடுத்த கட்டமாகப் பார்க்க விரும்புகிறோம்" என்கிறார் கூட்டுறவு அபிவிருத்தி அலுவலர் சிவபாலசிங்கம் பாலசுந்தரம். அத்துடன் புதிய கண்டுபிடிப்புக்கள் மற்றும் பெறுமதி சேர்த்தல் ஆகியன மூலமாக உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதை பற்றியும் வலியுறுத்துகிறார் அவர் . அவரது பொறுப்புகளின் ஒரு பாகமாக, நிதி நடவடிக்கைகளின் கொடுக்கல் வாங்கல்களையும் பதிவுகளையும் மிக உன்னிப்பாக அவதானிக்கும் அவர், PTKயின் மிகப்பெரிய பலம் தமக்கு எதிரான குறிப்பிடத்தக்க தடைகளையும் தாண்டி சிரமங்களுடன் முன்னேறி வந்திருப்பதே என்கிறார்.

கூட்டுறவுச் சங்கத்தில் சேர்ந்ததால், பல்வகைமைப்பட்ட திறன்களை முக்கியமாக நிதி முகாமைத்துவம், இயற்கை வேளாண்மை, வணிக பேச்சுவார்த்தைகள் ஆகியவை உட்படக் கற்றுக்கொண்டதாக இந்தப் பெண்கள் கூறுகின்றனர். அடிக்கடி வறட்சி கடுமையாகப் பாதிக்கும் பிரதேசமாக இருப்பதால் நீர் முகாமைத்துவம் சம்பந்தப்பட்ட புதிய விவசாய பயிற்சிகளைக் கற்றுக்கொள்வது, பயிர் பரவலாக்கம் மற்றும் நீர்ப்பாசனத் தொழிநுட்பங்களைப் பழகுவது ஆகியன மிகுந்த முக்கியம் வாய்ந்தனவாக அமையும் என்கிறார் இந்தக் கூட்டுறவின் முன்னாள் தலைவிகளில் ஒருவரான கிருஷ்ணகுமார் ஜெயரஞ்சினி.

இந்தக் கூட்டுறவுக்கு இன்னமும் பல சவால்கள் காத்திருந்தாலும், EMPOWER திட்டத்தின் கீழ் 8 கிராம சேவகர் பிரிவுகளில் இருந்து தமது அங்கத்துவத்தை 19 கிராம சேவகர் பிரிவுகளுக்கு அதிகரிப்பதோடு, இன்னும் பல நூறு புதிய அங்கத்தவர்களை சேர்த்துக்கொள்ளும் எண்ணம் இருக்கிறது. இந்தப் பெரிய மாற்றத்தின் விளிம்பில் நிற்கும் வேளையில்தான் எத்தனை நீண்ட தூரம் தாம் பயணித்து வந்திருப்பதை இந்தப் பெண்களால் உணரக்கூடியதாக உள்ளது.

"நாங்கள் ஆரம்பித்த நேரம், எமக்கு கடனாக ஒரு 1000 ரூபாவைப் பெற்றுக்கொள்வது கூட முடியாத நிலையொன்று இருந்தது. ஆனால் இப்போது எங்கள் சமூகம் தமக்கு நுண் கடனைப் பெற்றுக்கொள்ள எம்மை அணுகுகிறது" என்று மகிழ்வுடனும் மனநிறைவுடனும் கூறுகிறார் ஜெயரஞ்சினி. இப்படியான திட்டங்கள் சமுதாயத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பரந்து விரிந்த நோக்கத்திற்கும் உதவுகிறது என்று அவர் நம்புகிறார்.

"சாதாரணமாக, முரண்பாடுகள் ஆனவை பொருளாதாரத் தளங்களிலும் வளங்களைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சமநிலையற்ற தன்மையிலும் தான் உருவாகிறது. நாங்கள் அதை மாற்ற்றிக்கொண்டு வருகிறோம், எம் மக்கள் மேலும் மேம்பாடு அடைந்து வருகிறார்கள், அத்துடன் நாம் மற்ற சமூகங்களோடு நல்ல வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்துவதால் எம் மக்களுக்கு வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள மேலும் வழிவகைகள் கிட்டுகின்றன, "என்று சொல்லும் அவர் மேலும் எளிமையாகக் குறிப்பிடும் ஒரு விடயம் " எல்லோரையும் அமைதியான வழிமுறையில் சிந்திப்பதற்கு கூட்டுறவு முயற்சி ஊக்குவிக்கிறது"